2023 பட்ஜெட் ஆலோசனையை தொடங்கிய நிதி அமைச்சர்..!
2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தயார் செய்ய முதற்கட்டமாக தொழிலதிபர்களோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனையை தொடங்கினார்.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்பதால் அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படும். எனவே அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும் முழு நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதற்கட்டமாக நடைபெறும் ஆலோசனையில் தொழில்துறையை சேர்ந்தவர்கள் காணொளி மூலமாக பங்கேற்றனர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர்கள், நிதித்துறை செயலர் சோமநாதன், தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்தன் கலந்து கொண்டனர்.
முதலில் உட்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை வேளாண் துறை பங்கு, சந்தை நிதி நிறுவனங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது வியாழக்கிழமை அன்று ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான அம்சங்கள், கல்வி, ஆராய்ச்சி, சுகாதாரம், நீர்வளம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளனர்.
பட்ஜெட் தொடர்பான ஆலோசனை இந்த மாதம் 28ஆம் தேதி வரை தொடர்கிறது. அன்றைய தினம் தொழிற்சங்க தலைவர்கள், தொழிலாளர் நல அமைப்புகள் பொருளாதார வல்லுநர்களோடு நிதி அமைச்சர் ஆலோசனை நடத்துவார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





