திமுக மாணவரணி செயலாளராக பெண் நிர்வாகி நியமனம்..!
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மறுதினம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை ஒட்டி, கூட்டணி தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வரும் திமுக, தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்கும் பணியிலும் மும்முரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், நாளை மறுதினம் காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அதில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மாணவரணி துணைச் செயலாளராக இருந்த ஜெ.வீரமணி, மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணி செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஜெ.வீரமணி என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக மாணவரணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி மாற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





