தன்னை அடையாளம் தெரியாததால் பெண் துணை கமிஷனர் செய்த அடாவடி..!
சிவில் உடையில் இருந்த தன்னை அடையாளம் தெரியாத காரணத்தினால் பெண் கான்ஸ்டபிளை இரண்டு நாட்களுக்கு மாற்றி 12 மணி நேரம் வேலை வாங்கிய கூடுதல் பெண் துணை கமிஷனருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நகர சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து துறை துணை கமிஷனராக ஐஸ்வர்யா ராய் என்பவர் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பதவியேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்வதற்காக ஐஸ்வர்யா சென்றுள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்துள்ளார்.
முகத்தில் மாஸ்க் அணிந்து உள்ளார். இதனால் உயர் அதிகாரியை அடையாளம் காண முடியாமல் காவல் நிலையத்தில் பாதுகாப்பு படையில் இருந்த பெண் போலீஸ் ஒருவர் அவரை தடுத்து என்ன ஏது என்று விசாரித்துள்ளார். விசாரித்ததில் தன் உயர் அதிகாரி என்பதை தெரிந்து கொண்டு உடனடியாக அவரை போலீஸ் நிலையத்தில் வருமாறு கூறினார் .
இருந்தாலும் கோபமடைந்த துணை கமிஷனர் ஐஸ்வர்யா என்னை அடையாளம் தெரியாமல் எப்படி தடுக்கலாம் என்று கூறி அந்த பெண் அதிகாரி இடத்தில் விளக்கம் கேட்டுள்ளார். பெண் போலீஸ் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்தும் ஏற்றுக்கொள்ளாத துணை கமிஷனர் ஐஸ்வர்யா கொச்சியில் உயர்நீதிமன்ற பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியில் ஈடுபட அந்த பெண் போலீசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக கேரளாவில் இப்பணியில் ஈடுபடும் போலீசார் 6 மணிநேரம் மட்டுமே பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் அந்த பெண் போலீஸ் அதிகாரியை 12 மணிநேரம் பணியில் இருக்க துணை கமிஷனர் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. கேரள போலீஸ் துறையில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
பொதுவாகவே கேரள போலீஸ் நிலையங்களில் யாராக இருந்தாலும் உரிய விசாரிப்புக்கு பிறகு உள்ளே அனுப்பப்படுவார்கள் என்று போலீஸார் கூறுகின்றனர். ஆனால் உயர் அதிகாரியின் வாகனத்தை கூட அந்த பெண் போலீசார் அடையாளம் காணமுடியவில்லை என்று துணை கமிஷனர் ஐஸ்வர்யா கேள்வி எழுப்புகிறார்.
பெண் போலீஸ் பாதுகாப்புக்கு இருந்த பகுதியில் இருந்து வாகனங்கள் பார்க் செய்யப்படும் இடத்தை காண முடியாது என்றும் சொல்லப்படுகிறது.







