கொரோனா தொற்று நோய் பரவலாம் என்கிற பயத்தில் பிரதான ரோட்டை மறித்து தடை ஏற்படுத்திய சூர்யாநகர் பகுதி மக்கள் நெசவாளர் காலனி மக்கள் கடும் அவதி
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7 வது வார்டில் காமாட்சியம்மன் நெசவாளர் காலனி உள்ளது. இங்கு 260 க்கும் மேற்பட்ட வீடுகளில் 600 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இங்குள்ளவர்கள் அனைவரும் விசைத்தறி தொழிலாளர்கள். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் இந்த தொழிலாளர்களுக்காக இலவசமாக வழங்கப்பட்டது. இவர்களுக்கு இப்பகுதியை ஒட்டி அந்த காலத்தில் இருந்த 4-செட்டிபாளையம் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட தடத்தில் வழி ஏற்படுத்தி இன்று வரை இந்த ரோட்டை பிரதான ரோடாக பயன்படுத்திய வருகிறார்கள்.
மேலும் இப்பகுதிக்கு எதிரே இருந்த காடுகள், தோட்டங்கள் சைட்டுகளாக பிரிக்கப்பட்டு நெசவாளர் காலனி விரிவாக்கம் என பெயரிட்டு தற்போது அப்பகுதி முழுவதும் வீடுகள் கட்டப்பட்டு அதன் உரிமையாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள ரோடுகள் குறுகளானவை. அதேபோல் காலனிக்கு இடது புறத்தில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரேடியஸ் அவென்யூ என்ற பகுதி புதிதாக ஏற்படுத்தப்பட்டு அங்கும் 30 மேற்பட்ட வீடுகளும், இந்த இடத்திற்கு எதிரே உள்ள தோட்டத்தில் லைன் வீடுகள் கட்டப்பட்டு அங்கு பனியன் கம்பெனியில் வேலைசெய்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்த பிரதான சாலையையே பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் 4-செட்டிபாளையம் பஞ்சாயத்து திருப்பூர் மாநராட்சியுடன் சேர்க்கப்பட்டதால் திருமுருகன்பூண்டி பேரூராட்சி எல்லைப்பகுதியில் திருப்பூர் மாநகராட்சி 2 வது வார்டில் இந்த பிரதான சாலையையொட்டி சூர்யா நகர் ஏற்படுத்தப்பட்டு தற்போது அங்கு 50 க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் சூர்யா நகரில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் அப்பகுதியில் குடியிருந்து வரும் சிலர் நேற்று முன்தினம் காலை 12 மணியளவில் பூண்டி ரிங்ரோட்டில் இருந்து நெசவாளர் காலனிக்கு செல்லும் பிரதான ரோட்டை முற்றிலும் அடைத்தவாறு பேரிக்காடுகளை வைத்தும், முட்களை கொண்டும் அடைத்துவிட்டனர்.
அத்துடன் நெசவாளர் காலனி தொடங்கும் இடத்திலும் பைப்புகள் மற்றும் முட்களை போட்டு அடைத்துவிட்டனர். இதனால் நெசவாளர் காலாணி பொதுமக்கள் அக்காலணியை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து நெசவாளர் காலனி மக்கள் சிலர் சூர்யா நகர் பகுதி மக்களிடம் சென்று தடைகளை அப்புறப்படுத்த கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் தடைகளை அப்புறப்படுத்த மறுத்ததோடு திட்டி அனுப்பிவிட்டனர். இதனால் நெசவாளர் காலனிக்கு வரும் காய்கறி வண்டிகள், கேஸ் வண்டிகள் வராமலும், மேலும் இருசக்கர வாகனங்களில் கூட செல்லமுடியாமல் விரிவாக்கம் பகுதியில் உள்ள குறுகலான ரோட்டை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் கடும் துயரை சந்தித்து வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து மாலை இருதரப்பினர் சார்பில் 100 கும் மேற்பட்டோர் அந்த தடைகள் வைக்கப்பட்ட பகுதியில் ஓன்றுகூடி தடைகளை அகற்ற சொல்லி வாக்குவாதம் செய்தனர். அப்போது பிரதான சாலையை தடை செய்ய உங்களுக்கு யார் அதிகாரமே கொடுத்தார்கள்? அப்படி தடை ஏற்படுத்த வேண்டும் என்றால் உங்கள் பகுதியில் உள்ள குறுக்கு சாலைகளை தடுத்துக்கொள்ள வேண்டியது தானே? மேலும் முழுரோட்டையும் அடைக்காமல் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல வழியாவது ஏற்படுத்தி தரவும், அந்நியர்கள் யாராவது வருவது குறித்து சந்தேகம் இருந்தால் போலீசில் புகார் செய்து போலீசார் மூலம் அவர்களை தடுத்து நிறுத்தலாம் என்று பேசி பார்த்தனர். ஆனாலும் அவர்கள் தடையை அகற்ற மறுத்துவிட்டனர்.

அதனால் இருதரப்பினருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பிரச்சினை பெரிதாக்குவதற்குள் போலீசாரே அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று நெசவாளர் காலனி பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது. அதனை தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?
பாக்ஸ் :
தற்போது திருப்பூர் முழுவதும் பிரதான ரோட்டை ஒட்டி செல்லும் சாலைகளை அப்பகுதியில் வசித்து வருபவர்கள் தன்னிச்சையாக தடைகளை ஏற்படுத்தி யாரையும் உள்ளே விடாமல் தடுத்து வருவது பெருமைக் குரியதாகவும், கெத்து காட்டுவதாகவும் அமைத்துள்ளது. பிரதான சாலைகளை முற்றிலும் தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லாத நிலையில் இவர்கள் இப்படி செய்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும் தடை ஏற்படுத்திய இடத்தில் கரோனோ குறித்த எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் கும்பல் கும்பலாக உட்கார்ந்து பேசிவருவதும், முகக்கவசம் அணியாமல் இருப்பதும் வேதனைக்கு உரியதாக உள்ளது. ஊரடங்கு உத்தரவு என்ன என்பது தெரியாமல் சிலர் நடைபயணம் மேற்கொள்வதும், சிலர் கைபந்துகள் விளையாடி வருவதும் நடந்து வருகிறது.
இதனை அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது அதைவிட வேதனையாக உள்ளது. இதற்கு ஒரு சில இடங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் தகுதியில் போலீஸ் அதிகாரிகள் வாய்வழியாக தடைகளை போட்டுக்கொள்ள சொல்லிவிடுகிறார்கள். இதுகுறித்து போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்வதும் இல்லை. ஒரு சாலையை குறுக்கிட்டு தடுத்த தடை ஏற்படுத்துவது மற்றவர்களின் உரிமையை பறிப்பதாகவும் உள்ளது. அப்படி தடை ஏற்படுத்த வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த சாலையை இந்த காரணத்திற்க்காக தடை ஏற்படுத்தலாம் என்று கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்து பின்னர் அந்த தடைக்கான உத்தரவை கலெக்டர் தந்தால் மட்டுமே செய்யமுடியும். மற்ற தனி நபர்களோ, ஒரு குறிப்பிட்ட பகுதியினரோ யாரும் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது குற்ற செயலாகும்.
இதேபோல் ஏ.வி.பி பள்ளி எதிரே ஆத்துப்பாளையம் செல்லும் ரோடு, அங்குள்ள மின்மயானத்திற்கு எதிரே உள்ள சாலைகளை அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் பொதுமக்களே ரோட்டில் தடை ஏற்படுத்தி உள்ளனர். இந்த செயல்கள் தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அமைந்துவிடும் அதனால் திருப்பூர் மாவட்டமே முழுவதும் உள்ள இந்த நிலையை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் குமுறுகிறார்கள்.







