புதுச்சேரியில் ரூ. 20 கோடி மதிப்புள்ள போலி மாத்திரைகள் பறிமுதல்..!
டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சன் பார்மசி என்ற நிறுவனத்தின் பெயரில் புதுச்சேரியில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது. இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி மாத்திரைகளை மொத்தமாக விற்பனை செய்ததாக சீர்காழியை சேர்ந்த ராணா (வயது 45), காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் (46) ஆகிய 2 பேரை கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் குடியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலை நடத்தி வருவது தெரியவந்தது. இதனைதொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு சோதனை நடத்த சென்றனர். அப்போது தொழிற்சாலையின் கதவு மூடி இருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு அட்டை பெட்டிகளில் போலியான மாத்திரைகள் மற்றும் அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருந்தன. மூல பொருட்கள் போலீசார் இது குறித்து காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ருதி, ரகுநாயகம், மருந்து கட்டுப்பாட்டுதுறை ஆய்வாளர்கள் இந்துமதி, ஜெனிபர் மற்றும் அதிகாரிகள் மருந்து தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு இருந்த மாத்திரைகள்போலியானது என தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, ஆய்வுகாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள், விசாரணையில் மேட்டுப்பாளையம் மற்றும் குருமாம்பேட் பகுதியில் மொத்தம் 4 குடோன்களில் போலி மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாத்திரைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தொழிற்சாலை மற்றும்குடோன்கள் மூடிசீல்வைக்கப்பட்டன.
இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட போலி மாத்திரைகளின் மதிப்பு 20 கோடி ரூபாய் இருக்கும். இதனை தயார் செய்ய பயன்படுத்தப்படும் எந்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ. இரண்டு முதல்14 கோடி இருக்கும். இன்னும் 6 குடோன்களில் தொடர்ந்து சோதனை நடத்ததிட்டமிட்டுள்ளோம். முழு ஆய்வு மற்றும் விசாரணை முடிந்த பிறகே மொத்த மதிப்பு தெரியவரும் என்றனர். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.





