+2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27-ல் தேர்வு… அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு
+2 இறுதித்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வரும் ஜூலை 27-ல் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வியும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுகள் பாதிக்கப்பட்டது. கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டு கடைசியில் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என அரசு அறிவித்துள்ளது.
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும்பாலான பாடத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த மார்ச் 25-ந் தேதி கடைசி தேர்வு நடைபெற்றது. அப்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கிட்டத்தட்ட 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த மாணவர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால் தேர்வுகள் நடத்த முடியவில்லை. இதனால் +2 தேர்வு முடிவுகளை வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் வரும் 27-ந் தேதி, +2 இறுதித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட்டை ஜூலை 13 முதல் 17ஆம் தேதி வரை www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது படித்த பள்ளியிலேயே பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுத உள்ள மையங்களில் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.







