--- --:--:-- --

திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் – முதல்வர்

1

திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகளின் துணைக் கொண்டு சதி செய்தாலும் அதனை முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக திருநெல்வேலி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக, தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

 

இதன் மூலம் தாமிரபரணியின் வெள்ள நீர், திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு 75 கிலோ மீட்டர் தூரம் திருப்பி விடப்படும். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பிற்கு, மத்திய அரசிடம் கேட்ட நிதியில் ஒரு சதவிகிதம் கூட தரப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

 

தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டின் நலன் சார்ந்து கோரிக்கை வைத்தால், அதனை நிறைவேற்றுவேன் எனக் கூறினார்.இந்நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள், திமுக மீது அவதூறுகளை பரப்புவதாக முதலமைச்சர் விமர்சித்தார். துரோகிகளின் துணையுடன் சதி செய்தாலும் அதனை முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

அடுத்த 5 ஆண்டுகளில் தென்மாவட்டங்களின் வளர்ச்சி புலி பாய்ச்சலில் இருக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில்,75 ஆயிரத்து 151 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர், 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நேரு வெள்ளி வாள் வழங்கி கவுரவித்தார்.

Right Menu Icon