ஈபிஎஸ் தனது தோல்விகளைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்
பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும். அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்கிற நிகழ்ச்சி மூலம் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, டெல்லி தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்குச் சம்மட்டி அடி என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் ஏற்கனவே சொன்னதுதான்.. பழனிசாமியின் அறிக்கைகளைப் பார்த்தால், பா.ஜ.க.வின் அறிக்கைகள் போன்றுதான் இருக்கும்.
அவருடைய குரலே, பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்தான்! நாம் “கள்ளக் கூட்டணி” என்று சொல்வதை நிரூபிக்கிறார் பழனிசாமி. அவ்வளவுதான்! இதையெல்லாம் பேசுவதற்கு முன், அவர் தன்னுடைய தோல்விகளைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.” என்று கூறினார்.தொடர்ந்து கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை எவ்வாறு பார்க்கிறீர்கள்? முரண்கள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை நான் ஆலோசனையாகத்தான் பார்க்கிறேன்.
முரண்பாடாக நினைப்பதில்லை. ஒரு குடும்பத்தில், பணிபுரியும் அலுவலகத்தில், அனைத்து இடத்திலும் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். கருத்து சொல்வது, ஜனநாயகப்பூர்வமான உறவின் அடையாளம்தான். 2019-இல் இருந்து ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் களத்தைச் சந்தித்துக் கொண்டு வருகிறோம். பா.ஜ.க.வை எதிர்த்து வெற்றி பெறுவதில், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக இருப்பது தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான். கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்தப் பாதிப்பும் இல்லை.” என்று கூறினார்.
அதேபோல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான நிறைய செய்திகள் இப்போது வருகிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்கிறோம்.
பாலியல் குற்றங்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகள் வழங்குவதற்குச் சட்டமன்றத்தில் நானே சட்டம் கொண்டு வந்திருக்கிறேன். சிறப்பு நீதிமன்றங்கள் கொண்டு வந்திருக்கிறோம்; விரைவாக தண்டனை வாங்கிக் கொடுக்கிறோம். பாலியல் குற்றங்கள் செய்பவர்கள், அவர்கள் வீட்டில் இப்படியொரு குற்றம் நடந்தால் எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.” என்றும் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




