தனியார் பள்ளிகள் காலி இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட கல்வித்துறை உத்தரவு!
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான காலி இடங்களைக் கணக்கிடும் பணியை நாளை, ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க வேண்டும் என்றும், இந்த விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு பள்ளியிலும் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். 2025-26 கல்வியாண்டில் மாநிலத்தின் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட எல்.கே.ஜி (LKG) மற்றும் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையின் அடிப்படையில் இடங்கள் கணக்கிடப்படும்.
ஏப்ரல் 7-ந் தேதி இந்த காலி இடங்கள் குறித்து அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். ஏப்ரல் 15-ந் தேதி இது தொடர்பான அறிவிப்பு rte.tnschools.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும். ஏப்ரல் 20-ந் தேதி முதல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சேர்க்கைக்காக இணையதளத்தில் விண்ணப்பிக்ககலாம். மே 18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். அதன்பிறகு மே 22-ந் தேதி குலுக்கல் முறை நடைபெறும். மே 29-ந் தேதி இறுதி சேர்க்கை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனது குழந்தையை எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்க வேண்டும் என்றால், குழந்தை 2022 ஆகஸ்ட் 1 முதல் 2023 ஜூலை 31-க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் என்றால், குழந்தை 2019 ஆகஸ்ட் 1 முதல் 2020 ஜூலை 31-க்குள் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் இணையதளம் வழியாகவோ அல்லது அந்தந்த பள்ளிகளிலோ ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவுடன் அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ், ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி (HIV) பாதித்தவர்கள், திருநங்கைகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குலுக்கலுக்கு முன்னதாகவே முன்னுரிமை அளிக்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், தங்களது ஆண்டு வருமானம் ரூ2 லட்சத்திற்கு மிகாமல் இருப்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரிபார்ப்பு ஏப்ரல் 22 முதல் மே 19 வரை நடைபெறும். தகுதியுள்ளவர்கள் அல்லது ஆவணங்கள் விடுபட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ் (SMS) மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
கடந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி அரசு விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதனால் ஏற்கனவே சேர்ந்த மாணவர்களை ஆர்.டி.இ பிரிவிற்கு மாற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இப்போது பழைய நடைமுறைக்குத் திரும்புவது தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க உதவும்,” என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.





