ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா? பாம்பா? ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி!
நான் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க, நான் என்ன பல்லியா, பாம்பா என்று, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி பதிலடி தந்துள்ளார்.
வரும் 8ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. வேட்பாளர்கள் வேட்புமனு முடிவடையும் சூழலில் தங்களது தொகுதிகளில் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆளுங்கட்சி தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சியான திமுக தரப்பில் மு.க. ஸ்டாலின் இருவரும் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடும் வெயிலுக்கு மத்தியில் இருவரும் பிரசாரம் மேற்கொண்டு வரும் அதே வேளையில், இருவரின் பேச்சுகளிலும் அனல் பறக்கிறது. ஒருவரையொருவர் தாக்கிக் பேசிவருவதால், அரசியல் களம் விறுவிறுப்படைந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரசார கூட்டங்களில், முதல்வர் பழனிசாமியை தாக்கி வருகிறார். ஊர்ந்து சென்றுதான் எடப்பாடி முதல்வார் பதவி வாங்கியதாக பிரசாரத்தில் ஸ்டாலின் கூறிவருகிறார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி தந்துள்ளார்.கடலூர் மாவட்டம் புவனகிரியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, “ஜெயலலிதா இறந்துவிட்டார் .கட்சி உடைந்து போகும் .ஆட்சி மாறி விடும் என்று எண்ணி இருந்தார்கள் .ஆனால் இப்படி ஒரு விவசாயி வருவேன் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும், “நான் தமிழக மக்களின் ஆசியுடன் இந்த பதவியில் இருக்கிறேன். ஸ்டாலின் அவர்களே, நான் ஊர்ந்து போய் பதவியை வாங்கவில்லை; நடந்துபோய் தான் பதவி வாங்கினேன். ஊர்ந்து செல்ல நான் பல்லியா? பாம்பா?. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் திமுக கையெழுத்திட்டது. ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு போன்றவற்றை கொண்டு வந்தது திமுக. ஆனால் அவர்கள் குறை கூறுவது அதிமுகவை தான். இப்போது பல்டி அடித்து விட்டனர்” என்றார்.





