--- --:--:-- --

எடப்பாடி தொகுதியில் மனுதாக்கல் செய்தார் முதல்வர் பழனிச்சாமி

edappady

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏழாவது முறையாக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

தமிழக சட்டசபைக்கு வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல், கடந்த 12ம் தேதி தொடங்கியது; வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். முதல் நாளில் மனுதாக்கல் செய்ய பெரும்பாலானோர் ஆர்வம் காட்டவில்லை. எனினும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 

இந்த நிலையில், சுபமுகூர்த்த நாளான இன்று, வேட்புமனு தாக்கல் செய்வதாக, முதல்வர் பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, நேற்றிரவு சென்னையில் இருந்து விமானத்தில் கோவைக்கு வந்த அவர், அங்கிருந்து காரில் சேலத்திற்கு சென்றார். இன்று காலை, சொந்த ஊரான சிலுவம்பாளையத்துக்கு சென்ற அவர், பெரியசோரகை சென்றாயபெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

 

அதை தொடர்ந்து, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனுவில் உள்ள விவரங்கள் சரியானவை என்று, தேர்தல் அதிகாரி முன்பு முதல்வர் பழனிச்சாமி உறுதிமொழியை வாசித்தார்.

எடப்பாடி தொகுதியில் முதல்வரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார். மக்கள் நீதிமய்யம் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீ ரத்னா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

கடந்த 1991 மற்றும், 2011ஆம் ஆண்டு, 2016 ஆம் ஆண்டு தேர்தல்களில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார்.  கடந்த 1996 மற்றும் 2006ம் ஆண்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தார்.

Leave a Reply

Right Menu Icon