அரசியலில் குதித்தார் சகாயம் ஐ.ஏ.எஸ்! தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டி
ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தொடங்கியுள்ள அரசியல் பேரவை, வரும் சட்டசபைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எனினும் சகாயம் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.
மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் குவாரி முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் பிரபலமானவர் சகாயம் ஐஏஎஸ். தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக பயணியாற்றிக் கொண்டிருந்த போது, சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஒய்வு பெற்றார். அதன் பின்னர், அரசியலுக்கு வரவேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசியல் பேரவை என்ற அமைப்பை சகாயம் தொடங்கினார். எதிர்வரும் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சகாயம் அணி 36 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சகாயம் கட்சி மட்டும் 20 இடங்களில் நிற்கிறது.
இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் சென்னை கோயம்பேட்டில் அளித்த பேட்டி: 2015ம் ஆண்டு நான் அரசியலுக்கு வர வேண்டும் என ஏராளமான இளைஞர்கள் பேரணியை நடத்தினார்கள். அவர்களிடம் நான், தற்போது செய்ய வேண்டியது அரசியல் அல்ல, முதலில் நாம் சமூகத்தை மாற்ற வேண்டும் என கூறினேன்.
சமீபத்தில் நான் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். எனவே தேர்தல் அரசியல் தாண்டி ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நாம் களம் காண்போம். வளங்களை பெரும் வணிக சக்திகள் பறித்து செல்வதை, இந்த மண்ணை உளமார நேசிக்கும் நாம் தடுக்க வேண்டும். நான் தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளேன். குறுகிய கால அவகாசம் இருக்கும் நிலையில், புதிய அரசியல் கட்சி துவங்க முடியவில்லை.
எனவே குறிப்பிட்ட தொகுதிகளை ‘சகாயம் குழு’ தேர்தல் களம் காணும். ‘தமிழ்நாடு இளைஞர் கட்சி’, ‘வளமான தமிழகம் கட்சி’ என்ற இரண்டு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட இருக்கிறோம். வெறுப்பு அரசியலை முற்றிலும் நாங்கள் நிராகரித்து தேர்தலை சந்திக்கின்றோம். மதச்சார்பின்மை, நேர்மை என்ற கொள்கையை முன் நிறுத்தி தேர்தல் களம் காண்போம். அதன்படி, 36 இடங்களில் போட்டியிட இருக்கிறோம். எனது அரசியல் பேரவை மட்டும் 20 இடங்களில் போட்டியிடுகிறது. இத்தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று சகாயம் கூறினார்.





