இன்று கரூர் செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று கரூர் செல்லும் விஜய், 32 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குகிறார். கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு கரூர் செல்லாத முதலமைச்சர் விஜய், முதல்முறையாக இன்று செல்லவுள்ளார்.
அதன்படி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று, அங்கிருந்து கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நண்பகல் 12 மணி அளவில் கரூர் செல்லும் முதலமைச்சர், வெண்ணமலை அருகே தனியார் கல்லூரியில், தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ஆனந்த் ஆய்வு செய்த நிலையில், 5 ஆயிரம் பேருக்கு மட்டும் QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக, கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் சந்திக்கவுள்ளார். மக்கள் சந்திப்பை முடித்துவிட்டு கரூர் ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 3 மணி அளவில் கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் விஜய், தோல் அல்லாத காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.
மேலும், பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கவுள்ளார்.





