தற்காலிக நியமனமாக அரசு வேலை- கரூர் அரசு பணி வழக்கில் தீர்ப்பு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிக நியமனமாக அரசு வேலை வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 நபர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தற்பொழுது வழங்கக் கூடாது, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு முடியும் வரை அரசு பணி வழங்க கூடாது என உத்தரவிடக் கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி தீரன் திருமுருகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு வேலை ஏன் வழங்கக் கூடாது? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மனுதாரர், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றால் சில விதிகளை கடைபிடிக்க வேண்டும் புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே கும்பகோணம் மகாமகம் சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம், ஆகிய நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் அரசு தரப்பில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தற்காலிக நியமனமாக அரசு வேலை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த அரசு பணி என்பது தற்காலிகமானது தான் என்றும் வழக்கின் விசாரணைக்கு முடிவுக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்னர்.





