ஞாயிறு முழு ஊரடங்கா? முதல் நாளே “சரக்கு” வாங்கி ஸ்டாக் வைக்கும் “குடிமகன்கள்”!! நேற்றைய “டாஸ்மாக்” விற்பனை அடேங்கப்பா ரகம்?
தமிழகத்தில் இந்த ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. ஆனால் குடிமகன்களோ உஷாராக முதல் நாளான சனிக்கிழமையே தேவையான சரக்கை வாங்கி விடுவதால் விற்பனை எகிறி வசூல் இரு மடங்காக கூடி விடுகிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 177.17 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் வியாபாரம் தூள் பறந்துள்ளது.
கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்களுக்கு கடும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் மால்கள், தியேட்டர்கள் போன்றவை திறக்கவே அனுமதிக்கப்படவில்லை. முதன் முதலில் ஊரடங்கு போடப்பட்ட காலத்தில் சுமார் ஒன்றரை மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளோ, இப்போது தங்கு தடையின்றி ஜெகஜோதியாக செயல்பட்டுக் கொண்டுள்ளன.
முதலில் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரைக்கும் என திறக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் கட்டுங்கடங்காத குடிமகன்கள் கூட்டம் குவிந்தது. பின்னர் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என 10 மணி நேர சேல்ஸ் நடைபெற்று வருகிறது.
சரக்கு வியாபாரம் படுஜோர்
இந்த கெரோனா காலத்தில், அன்றாட கூலி வேலை பார்ப்போர் போதிய வருமானமின்றி தவித்தாலும், கிடைக்கும் சொற்ப வருவாயை டாஸ்மாக் கடைகளில் கொண்டு போய் கொட்டுவதை குறைத்தபாடில்லை. இதனால், மற்ற தொழில்கள், வியாபாரங்கள் நசிந்து கிடந்தாலும் டாஸ்மாக் சரக்கு வியாபாரம் படுஜோராக நடைபெற்று தமிழக அரசின் கஜானாவுக்கு தினமும் கோடிக்கணக்கில் பணம் குவிந்து வருகிறது.
தமிழகத்தில் சென்னை மாநகரப் பகுதிகள் தவிர்த்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் தினமும் செயல்படும் நிலையில், இந்த ஜூலை மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரூ.183 கோடிக்கு மது விற்பனை
ஆனாலும் டாஸ்மாக்குக்கு நஷ்டம் இல்லாத ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாளான சனிக்கிழமைகளில் சரக்கு வியாபாரம் இரு மடங்காகி வருகிறது. வழக்கமாக தினசரி ரூ.100 கோடி என்ற அளவுக்கு விற்பனை என்றால், இந்த மாதம் முதல் சனிக்கிழமையான 4-ந் தேதி ரூ.171 கோடிக்கும். 11-ந்தேதி சனிக்கிழமையன்று ரூ.178 கோடிக்கும்,
கடந்த 18-ந்தேதி சனிக்கிழமை தினத்தில் அதிகபட்சமாக ரூ.183 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய சனிக்கிழமை தினத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ. 40.75 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.40.39 கோடிக்கும், சேலத்தில் ரூ.39.40 கோடி, கோவையில் ரூ.35.9 கோடி எனவும் சென்னை மண்டலத்தில் கடைகள் எண்ணிக்கை குறைந்த அளவாக இருப்பதால் ரூ.20 கோடிக்கும் சரக்கு விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“மறுநாள் கடையடைப்பு என்பதால் முன்கூட்டியே சரக்கை வாங்கி ஸ்டாக் வைக்கும் தமிழக பெருங்குடி மகன்களை திருத்துவது அவ்வளவு எளிதல்ல என்பது உண்மை தானோ?”







