+2 முடித்த மாணவிகள் அடுத்த இலக்கை நோக்கி முன்னேறுங்கள்: கீழக்கரையில் நடைபெற்ற உயர்கல்வி கருத்தரங்கில் உதவி பேராசிரியை எஸ்.பாத்திமா ருஸ்தா பேச்சு
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு பிளஸ் 2 க்கு பிறகு அடுத்த இலக்கு என்ன என்பது குறித்த உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு நடந்தது. பி.எஸ்சி உளவியல் துறை 3 ஆம் ஆண்டு மாணவி சுமையா கிராத் ஓதினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை உதவி பேராசிரியை ஏ.ராதா வரவேற்றார்.கல்வி உதவித்தொகையுடன் வேலை வாய்ப்பிற்கான உயர்கல்வி குறித்து தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியை எஸ்.பாத்திமா ருஸ்தா பேசுகையில், உயர்கல்வி கற்கச் செல்லும் மாணவியருக்கு ஆசிரியர், பெற்றோர், நண்பர், உறவினர் என பலரும் ஆலோசனை தரக்கூடும். பொதுத்தேர்வுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன.

வீட்டில் டிவி பார்ப்பது, செல்போனில் மூழ்கி கிடப்பதை 4 மாதங்களுக்கு ஒதுக்கி வைத்து, உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண் விஞ்ஞானம் என எண்ணற்ற உயர்கல்வி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
உங்கள் பெற்றோரின் பொருளாதாரத்திற்கு உங்களுக்கான உயர்கல்வியை தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் உடையவர்களாக மாற்றிகொள்ளுங்கள் என்றார்.

சென்னை சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் அல்ஹாஜ் காலித் ஏ.கே.புஹாரி வாழ்த்துரை பேசினார். தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர் ஆர்.கண்ணதாசன் தன்னம்பிக்கை தலைப்பில் பேசியதாவது: வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்துவதை கவனிப்பதிலும், மனப்பாடம் செய்வதிலும் மாணவியரை மிஞ்ச யாருமில்லை. காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை மனதில் இருத்திக்கொண்டு முழு ஆண்டு தேர்வை எளிதாக மதிப்பிடக்கூடாது.
ஒவ்வொரு தேர்வையும் முதல் முறையாக எதிர் கொள்கிறோம் என்ற சிந்தனையுடன் தேர்வெழுதி உயர்கல்விக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியத்துவம் என எண்ணி அச்சமின்றி எதிர்கொண்டு தேர்வை எளிதாக்கி கொள்ளுங்கள். உங்கள் உயர்கல்வியே எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தி என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒருவர் போல் மற்றவர் இருக்க முடியாது. விரிந்து பரந்துள்ள உலகில் கல்விக்கான வாய்ப்புகள் ஏராளம். தேர்ந்தெடுக்கும் துறையில் வல்லுநர்களாக மாறி, பெற்றோருக்கும் நாட்டிற்கும் பெருமை தேடி தாருங்கள் என்றார்.
மேலும் உயர் கல்வி குறித்து மாணவியரின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள், பேராசிரியைகள் விளக்கம் அளித்தனர். முடிவில் கல்லூரி மாணவியர் பேரவை தலைவி எச்.மரியம் அபிரா நன்றி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




