கர்ப்பிணி உயிரிழப்புக்கு நான் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு மருத்துவர் தற்கொலை..!
ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்த கர்ப்பிணி பெண் இறந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவர் விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. மருத்துவர் அர்ச்சனா தான் பிரசவத்தை பார்த்தார். பிரசவத்தின் பொழுது அந்த கர்ப்பிணி உயிரிழந்தார். இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
மருத்துவரின் அலட்சியமே இறப்புக்கு காரணம் என்று கூறி மருத்துவரை கைது செய்ய வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானா மருத்துவர் மருத்துவமனையில் மேல் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தற்கொலைக்கு முன் அர்ச்சனா எழுதிய கடிதம் சிக்கியது.
அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் யாரையும் கொல்லவில்லை என்றும் தன் கணவரையும் பிள்ளைகளையும் மிகவும் நேசிப்பதாகவும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் எழுதியுள்ளார்.






