--- --:--:-- --

ஹெல்மெட்,மாஸ்க்,சீட் பெல்ட் போடலையா ? பிடிங்க பைவ் ஸ்டார் சாக்லேட்.சாலைப்பாதுகாப்பு வார விழாவில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டரின் புது முயற்சி !!!

3.2

போக்குவரத்து மூலம் ஏற்படும் விபத்துக்களை குறைக்கும் நோக்கத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு சற்று முன்னதாகவே டிசம்பர் மாதங்களில் இருந்தே சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்கம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு வாரவிழா 2020-21 ம் ஆண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினர்.

 

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் போக்குவரத்து சிக்னல்களில் நிற்கும் இரண்டு,நான்கு சக்கர வாகனங்கள்,பேருந்து மற்றும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கள் கூசாமல் இருக்க கருப்பு ஸ்டிக்கர்களை பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் ப்ரித்திவிராஜ், சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்க தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் ஒட்டினர்.

 

மேலும்,சீட் பெல்ட், தலை கவசம் மற்றும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எடுத்துக் கூறினர்.அதேபோல், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பிற்கான முக்கிய விதிகள் குறித்து எடுக்கூறி விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கினர்.

 

அப்போது,புது முயற்சியாக காவல் ஆய்வாளர் ப்ரித்திவிராஜ் ஹெல்மெட், சீட் பெல்ட், மற்றும் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு 5 ஸ்டார் சாக்லெட் வழங்கி அறிவுரை வழங்கினார்.அப்போது, போலிஸை பார்த்ததும் அவ்வழியாக வந்த காரில் வந்த நபர் சீட்பெல்ட் எவ்வாறு அணிவது என்பது கூட தெரியாமல் கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டார். இதை கவனித்த ஆய்வாளர் சீட்பெல்ட் எவ்வாறு அணியவேண்டும் என செய்து காட்டினார்.

 

இந்நிகழ்ச்சியில் சேரன் ரேடியேட்டர்ஸ் கிருபாகரன்,ஸ்ரீ முருகன் பஜாஜ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணி,சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்க வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் கண்மணி ராஜா, மகேஸ்வரன், இராமகிருஷ்ணன், முனீஸ்வரன், பழனிச்சாமி,தரணி மற்றும் காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon