--- --:--:-- --

மதுக்கடைகளை மூடினால் 2026 தேர்தலில் திமுக வெற்றிபெறும்..!

2

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் விசிக மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பு மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டை விசிக தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதில், திமுக சார்பில் ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வாசுகி மற்றும் கூட்டணிக் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

 

இந்த மாநாட்டில் மது விலக்கை தேசியக் கொள்கையாக்க வேண்டும், மது விலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு தீர்மானங்களை திருமாவளவன் வாசித்துக் கொண்டிருந்தபோது தொண்டர்கள் மேடையை நோக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

அதன்பின் மாநாட்டில் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், சுயமரியாதைக்கு வேட்டு வைக்கும் செயல் மதுப் பழக்கம் என்று கூறினார். அதைத் தொடர்ந்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக தலைவராக இருந்த கருணாநிதி மக்கள் மத்தியில் மதுவிலக்கு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று சொல்லி எம்.ஜி.ஆரை அனுப்பி வைத்ததாகக் கூறினார்.

 

அதேபோல், இன்று திருமாவளவன் மது ஒழிப்பு பரப்புரையை தொடங்கியிருப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார்.இறுதியாக பேசிய திருமாவளவன், ‘‘மது ஒழிப்பு மாநாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல’’ என்றார். மதுவுக்கு அடிமையாகியிருந்தால் பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

 

இந்துக்கள் தான் அதிகளவில் குடிப்பதாகக் கூறிய திருமாவளவன், இந்து சமூகத்தை பாதுகாக்க மோடி, அமித்ஷாவுக்கு அக்கறை இருக்கிறதா இல்லையா என்றும் வினவினார். தேசிய மது விலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் கூறினார்.மது ஒழிப்பு மாநாட்டின் உயர்ந்த நோக்கத்தை சிலர் சிதைத்துவிட்டதாகவும், அனைத்துக் கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அரசியல் சாயம் பூசிவிட்டார்கள் என்றும் திருமாவளவன் ஆதங்கம் தெரிவித்தார்.

Right Menu Icon