கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த கலைஞர் அரங்கை ஒப்படைக்க தயார்..! தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!
கொரோனா நோயால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த வசதியாக அண்ணா அறிவாலபத்தில் உள்ள கலைஞர் அரங்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தமிழகத்திலும் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்தில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சுமார் 20 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவும் போதாது என்ற பட்சத்தில் தனியாரும் தங்கள் வசம் உள்ள பங்களாக்கள், பெரிய வீடுகளை அரசுக்கு, வழங்கி உதவுமாறு அரசுத் தரப்பில் கோரிக்கையும் விடப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை வரும் முன்னரே அடுத்து நடிகர் கமலஹாசன் தனது கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க தயார் என்று அறிவித்திருந்தார். நடிகர் பார்த்திபனும் தமது 3 வீடுகளை வழங்குவதாக ஒப்புதல் கொடுத்துள்ளார்.இந்நிலையில் திமுக சார்பில், கட்சி தலைமை அலுவலகம் செயல் படும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வசம் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகள் செய்ய வரும் அதிகாரிகளுக்கு போதிய ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






