“கொரோனாவில் இருந்து காப்பாத்துடா சாமீ..!” தமிழக கோவில்களில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு!!
கொரோனாவின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு யாகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசின் கோரத் தாண்டவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 10 தினங்களாக அசுர வேகத்தில் பரவி வரும் இந்த வைரஸ் தொற்றால் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான், அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்காகி பெருகி வருகிறது. தற்போது வரை உயிரிழப்பு 38 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நாடுகளில் அடுத்து வரும் நாட்களில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயிரிழப்பு இருக்கும் என்று அபாய மணி அடிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், தங்கள் நாட்டில் மட்டும் உயிரிழப்பை 2 லட்சத்திற்குள் கட்டுப்படுத்துவதே பெரும் சிரமமாக இருக்கும் போல என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலும் கொரோனா வைரசின் பரவல் இப்போது வேகமெடுத்துள்ளது எனவும், அடுத்த ஓரிரு வாரங்கள் மிக மோசமாக நாட்களாக அமையும் என்றும் பீதி கிளப்பப்படுகிறது. எதுவும் இன்று முதல் அடுத்த 48 மணி நேரத்தில் கொரோனாவின் பரவல் மிகப் பெரிய அளவில் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதற்கேற்றாற் போல் இந்தியாவில் கடந்த இரு தினங்களாக பாதிப்பு எண்ணிக்கையும் (1251), பலி எண்ணிக்கையும் (32) விறு விறுவென கூடி, வருகிறது. தமிழகத்திலும் இதே நிலைதான். நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றும் 7 பேருக்கு பாதிப்பு உறுதியாகி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே டெல்லி நிஜாமுதீனில் கடந்த வாரம் நடந்த இஸ்லாமிய மாநாடு ஒன்றில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், அதில் பலருக்கும் இந்த வைரஸ் அறிகுறி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற நிலையில், அத்தனை பேரையும் கண்டறிந்து சோதனை நடத்தும் முயற்சிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பீதி கிளம்பியுள்ளது.
இதற்கிடையே கொரோனா தாக்குதலில் இருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டி, தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் நாளை முதல் ஏப்ரல் 4-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடத்த இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, மக்கள் கூடுவதை தடுக்கும் முன்னைச்சரிக்கையாக அனைத்து கோவில்களும் ஏற்கனவே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு நடைபெறும் சிறப்பு யாகம், பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், கோயில் சிவாச்சாரியார்கள், பூசாரிகள் மட்டுமே இந்த யாகத்தை நடத்த வேண்டும் என்றும் அற நிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.






