7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்..!
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி திமுக சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அளிக்க சட்டப்பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு அரசு தரப்பில் ஆளுநரை நேரில் சந்தித்து அமைச்சர்கள் வலியுறுத்தினர்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். மசோதா குறித்து முடிவெடுக்க 4 வாரங்கள் வரை அவகாசம் தேவை என ஆளுநர் பதிலளித்திருந்தார் .
இந்த நிலையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும், ஆளுநருக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க அதிமுக அரசு தவறியதாக கண்டனம் தெரிவிக்கவும், ஆளுநர் மாளிகை முன் திமுகவினர் இன்று காலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.







