நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி திமுக மனு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் சென்னையை தவிர 9 மாவட்டங்களுக்கு விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே அமர்வில் முறையிட திமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் இருக்கும் மனுக்களுடன் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக தோற்றுவிக்கப்பட்டவை உட்பட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னையைத் தவிர 27 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.





