திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு திடீர் மூச்சுத்திணறல்..! அப்போலோவில் அனுமதி!!
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திடீர் மூச்சுத் திணறல் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பழகனுக்கு 98 வயதாகிறது. கருணாநிதியை விட ஒன்றரை வருடங்கள் மூத்தவரான அன்பழகன், திமுகவை அண்ணா தொடங்கிய காலம் தொட்டே முன்னணி தலைவராக வலம் வருகிறார். 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாலர் பொறுப்பு வகித்து வரும் அன்பழகன், கட்சியிலும், திமுக ஆட்சியில் இருந்த போதும், கருணாநிதிக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து உற்ற தோழனாக விளங்கியவர்.
இனமானப் பேராசிரியர் என கட்சியினரால் அன்போடு அழைக்கப்படும் க.அன்பழகன், வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு வருடமாக கட்சிப் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார். அடிக்கடி உடல்நலக் கோளாறும் ஏற்பட்டதால் வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்தவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, க.அன்பழகனுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், உடல் நிலை நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.





