திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி வெளியீடு: கவர்ச்சிகர அறிவிப்புகள் உண்டு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கை, மார்ச் 11 ஆம் தேதி வெளியிடப்படும் என்று, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒரு மாதமே உள்ளதால், அரசியல் கட்சிகள் வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரசார வியூகம் வகுப்பதில் தீவிரமாக உள்ளன.
ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இரண்டுமே, கூட்டணி கட்சிகளுடான தொகுதிப் பங்கீட்டை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. தொகுதி எண்ணிக்கையில் கட்சிகளுடன் இழுபறி நீடிப்பதால், தொகுதிப் பங்கீடு அறிவிப்புகள் தள்ளிப் போகின்றன. அனேகமாக ஓரிரு நாளில், இந்த தேக்கநிலை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ஆம் தேதி .வெளியிடப்படும் என்று, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மக்களின் மனதை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் மக்களுக்காகவே உருவான திமுக தேர்தல் அறிக்கை தேர்தலில் கதாநாயகனாக விளங்கும். தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11ல் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இம்முறை எப்படியும் அதிமுகவிடம் இருந்து ஆட்சியை பறித்துவிட வேண்டுமென்பதில் திமுக உறுதியாக உள்ளது. எனவே, தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள், இலவச பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட சலுகைகள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.





