அரசியலில் குதித்தார் பிரபல நடிகரின் மனைவி! திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு!!
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விமலின் மனைவி அக்ஷயா, மணப்பாறை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
பசங்க, களவாணி, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் விமல். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணாங்கொம்பு, விமலின் சொந்த ஊராகும். முன்னாள் திமுக அமைச்சரும், திருச்சி மாவட்ட மூத்த நிர்வாகியுமான கே.என்.நேருவுடன், நடிகர் விமலுக்கு நெருங்கிய நட்பு உள்ளது. விமலுக்கு குழந்தை பிறந்தபோது கே.என்.நேரு நேரில் சென்று வாழ்த்தினார்.

இதேபோல், திருச்சி திமுகவின் இன்னொரு பிரபலமான அன்பில் பொய்யாமொழி உடனும் நடிகர் விமல் குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விமல் போட்டியிடுவார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால், நடிகரான உதயநிதி ஸ்டாலினுக்கு இது பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விமலுக்கு சீட் தரலாம் என்று கே.என்.நேரு பரிந்துரை செய்ததாகவும், இதனால் உதயநிதி கொந்தளித்ததாகவும் கூட செய்திகள் அரசல் புரசலாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த சூழலில், தற்போது நடிகர் விமலின் மனைவி அக்ஷயா, மணப்பாறை தொகுதியில் போட்டியிட திமுக தலைமையிடம் விருப்பமனு கொடுத்துள்ளார். அத்துடன் தனது கணவரான நடிகர் விமலுடன் உதயநிதிஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.
ஒருவேளை அக்ஷயாவுக்கு வாய்ப்பு தரப்பட்டால், அவருக்கு ஆதவாக நடிகர் விமல் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. வளர்ந்து வரும் நடிகரான விமல் குடும்பம் அரசியலில் குதித்திருப்பது, திரையுல வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.





