மார்ச் 10ம் தேதி திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ஸ்டாலின் தகவல்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10ம் தேதி வெளியாகும் என்று, அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டம் காணொலி வாயிலாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வரும் 10ம் தேதி புதன்கிழமை அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
திமுக தேர்தல் அறிக்கை வரும் 11ம் தேதி வெளியாகும் என்றும், இம்முறையும் தேர்தலில் அது கதாநாயகனாக இருக்கும் எனவும் ஸ்டாலின் அறிவித்திருந்தார். தேர்தல் அறிக்கை வெளியான அடுத்த நாளே, அதாவது மார்ச் 12, 13 ஆம் தேதி தேதிகளில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையை ஸ்டாலின் மீண்டும் தொடங்கவுள்ளார்.
திமுக கூட்டணி கட்சியில் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனிதநேய மக்கள் கட்சி 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுகவுடன் இன்னமும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு 54 இடங்களை ஒதுக்கிவிட்டு, திமுக 180 இடங்களில் போட்டியிடலாம் என்று தெரிகிறது.





