ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்! காரணம் என்ன?
சேலம் மாவட்டம் ஆத்தூர் (தனி) தொகுதியில் (தனி), திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு பதில், சின்னதுரை என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். சாதி தொடர்பான சர்ச்சை எழுந்ததால், திமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தமிழக சட்டமன்றத்திற்கு வரும் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுக 173 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் 61 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதை தொடர்ந்து, திமுக வேட்பாளர் பட்டியல் கடந்த 12ம் தேதி வெளியானது. இம்முறை திமுக வேட்பாளர்கள் பட்டியலில், சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 70 பேருக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் (தனி) தொகுதியில், ஜீவா ஸ்டாலின் என்பவர் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஜீவா ஸ்டாலின் ஆதி திராவிடர் இல்லை என சர்ச்சைகள் கிளம்பியதால், தற்போது .சின்னதுரை என்பவரை சேலம் ஆத்தூர் தொகுதி வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் இன்று (மார்ச் 16 ) வெளியிட்ட அறிவிப்பில், “சேலம் கிழக்கு மாவட்டம், 82. ஆத்தூர் (தனி) தொகுதியில், திமுகவின் சார்பாகப் போட்டியிட, ஏற்கெனவே ஜீவா ஸ்டாலினின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு மாறாக, தற்போது, கு.சின்னதுரை பி.இ., ஆத்தூர் (தனி) தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக, ஏ.பி.ஜெயசங்கரன் போட்டியிடுகிறார்.





