அதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகல்? பேச்சுவார்த்தையை புறக்கணித்ததால் பரபரப்பு!
தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவுடன் இழுபறி நீடித்து வரும் நிலையில், சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடக்கவிருந்தநிலையில் தேமுதிக புறக்கணித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றை இறுதி செய்வதில், அதிமுக – திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக தரப்பில் பாமகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் இன்று முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதையடுத்து பாஜக தலைவர்களுடன் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் இ.பி.எஸ். பேச்சு நடத்தியுள்ளனர். எனினும், இதில் முடிவு எட்டப்படவில்லை.
அதேநேரம், தேமுதிகவுடன் அமைச்சர்கள் தங்கமணி உள்ளிட்டோர் பேச்சு நடத்தி வருகின்றனர். இதில், தனக்கு 41 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என்று தேமுதிக கேட்டு வருகிறது. ஆனால், ஆனால், முன்பு இருந்த தேமுதிக வேறு, இப்போது தன் பலம் குறைந்துவிட்டது என்று கூறி, 10 தொகுதிகளை மட்டுமே அதிமுக ஒதுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
இது தேமுதிக தரப்பில் பிரேமலதா, சுதீஷ் ஆகியோருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவுடன் முதல்வர், துணை முதல்வர் நேரடியாக பேசுகின்றனர். எங்களை அமைச்சர்களை அனுப்பி பேச்சுவார்த்தைக்கு கடைசியாக அழைக்கின்றனரே என்றும், தேமுதிக தலைவர்கள் எரிச்சலுடன் இருந்து வருகின்றனர்.
இறுதியாக, தங்களுக்கு 25 தொகுதிகள் என்று தேமுதிக இறங்கி வந்த நிலையில் 12 தொகுதிக்கு மேல் கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாக உள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த சூழலில், சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடக்கவிருந்தநிலையில் தேமுதிக புறக்கணித்துள்ளது. தங்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அத்துடன் தாங்கள் கேட்கும் தொகுதிகளும் வழங்கப்படவில்லை என்று, இன்றைய பேச்சுவார்த்தையில் தேமுதிக பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன், தேமுதிக கூட்டணி அமைக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அந்த கட்சியுடன் ஏற்கனவே சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே. உள்ளிட்டவை கூட்டணி அமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.





