--- --:--:-- --

டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு: நீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கும்!

Rajesh Doss

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இவ்வழக்கை நீதிமன்றமே கண்காணிக்கும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளது.

 

முதல்வர் பழனிசாமி, கடந்த மாதம் 21ம் தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். அவரது பாதுகாப்புக்கு பணிக்கு சென்ற போது, தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெரம்பலூரில் உள்ள பெண் ஐபிஎஸ். அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துனர். திமுக தலைவர் ஸ்டாலின், ‘பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலையை பார்த்து அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் தலைகுனிய வேண்டும். டிஜிபி ராஜேஷ் தாஸை சஸ்பெண்ட் செய்து கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்,’ என வலியுறுத்தினார்.

 

இந்த விவகாரத்தில், புகார் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு 6 பேர் கொண்ட குழுவை நியமித்தது. அத்துடன், வழக்கின் தீவிரத்தை உணர்ந்த டிஜிபி, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றினார்.

 

இச்சூழலில், டிஜிபி மீதான பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, தாமாக முன்வந்து இன்றுகாலை விசாரித்தது.

 

அப்போது பெண் காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா? என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை மாலைக்கு ஒத்திவைத்தார்.இன்று பிற்பகல், ராஜேஷ் தாஸுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஐபிஎஸ் அதிகாரியே புகார் தர இவ்வளவு சிரமம் என்றால் சாதாரண பெண் காவலர்களில் நிலை என்ன? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

அதோடு, இந்த பாலியல் துன்புறுத்தல் விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த நீதிபதி, இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை வெளியிடவோ பயன்படுத்தவோ கூடாது என உத்தரவிட்டார்.

 

அத்துடன், இந்த பாலியல் புகார் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் எனவும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தரவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், பாலியல் வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரைத்தார்.

Leave a Reply

Right Menu Icon