எங்கே செல்லும் இந்த பாதை…? தேமுதிகவுக்கு ’நோ’ சொன்ன திமுக! தனித்து களமிறங்க முடிவு?!
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக, அடுத்த வாய்ப்பாக திமுகவுக்கு தூதுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்த நிலையில், தனித்து களமிறங்கலாமா அல்லது யாருடன் கூட்டணி சேரலாமா என்று, தேமுதிக ஆலோசித்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் விரக்தியடைந்து, கடைசி நேரத்தில் அங்கிருந்து தேமுதிக வெளியேறியது. அடுத்த கணமே எல்.கே. சுதீஷ், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உள்ளிட்டவர்கள் அதிமுக மீது சேற்றை வாரி வீசினர். எல்லா தொகுதிகளிலும் அதிமுக தோற்க்கும் என்று சுதீஷ் சாபமிட, அதிமுக மண்ணைக்கவ்வும் என்று விஜய பிரபாகரன் வீரவசனம் பேசினார்.

அதிமுக தரப்பில் முதலில் தேமுதிக 41 தொகுதிகளை கேட்டது. படிப்படியாக இறங்கிவந்து, 23 தொகுதிகள் வரை அக்கட்சி கேட்டது. ஆனால், வெறும் 2 சதவீதம் உள்ள கட்சிக்கு, அத்தனை தொகுதிகளை தர முடியாது, 13 தொகுதிகள் + ஒரு ராஜ்யசபா சீட் என்று அதிமுக கறாராக கூறிவிட்டது. இதனால் விரக்தியடைந்து தேமுதிக நேற்று அதிமுகவுடான உறவை முறித்துக் கொண்டது.
தேமுதிகவின் பலம், பலவீனத்தை அண்மையில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் வாயிலாகவும் புள்ளி விவரத்தோடு, அதிமுக தலைமை அலசி ஆராய்ந்த பிறகே, 13 தொகுதிகளுக்கு மேல் இல்லவே இல்லை என்று கூறிவிட்டனர். அத்துடன், தேமுதிகவில் விருப்ப மனு கொடுத்தவர்களும் மிகவும்சொற்ப எண்ணிக்கையில் என்பதை அதிமுக மோப்பம் பிடித்துக் கொண்டது. எனவேதான், தேமுதிக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார்.
அதிமுகவில் இருந்து வெளியேறிய தேமுதிக, அடுத்து திமுக பக்கம் பார்வையை செலுத்தியது. ஏ.வ. வேலு மூலம் தேமுதிக தலைவர் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், திமுகவில் ஏறக்குறைய கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு எல்லாமே முடிந்திருந்தது. பந்தி முடிந்த பிறகு தேமுதிக வந்ததால், ஒன்றும் கொடுக்க முடியாத நிலை திமுகவுக்கு. ஒருவேளை திமுக ஏற்றுக் கொண்டாலும், 5 சீட்டுகளுக்கு மேல் கிடைக்காது என்பதை தேமுதிக அறிந்திருந்தது. திமுகவிற்கும் தேமுதிக மீது பெரியாத ஈர்ப்பு உண்டாகவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இருந்து கொண்டே, திமுகவுடன் ரகசியமாக தேமுதிக பேச்சு நடத்தியது. இதனை அப்போதே துரைமுருகன் படாரென போட்டு உடைத்தார். இதனால், அக்கட்சி மீதான நம்பகத்தன்மை என்பது, இரு கழகங்களுக்கும் இல்லாமல் போய்விட்டது. தேமுதிகவின் வாக்கு வங்கி விகிகத்தையும் திமுக கணக்குப்போட்டு, தேமுதிக ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜ்; அதை ஏன் சுமக்க வேண்டும் என்று, திமுக தலைவர்கள் நோ எண்ட்ரி கார்டு போட்டுவிட்டனர்.
இப்போது தேமுதிகக்கு 3 வாய்ப்புகளே உள்ளன. ஒன்று தனித்து போட்டியிடுவது. அடுத்து, அமமுக அணிக்குச் செல்லுவது; மூன்றாவது கமல்ஹாசனின் அணியில் சேருவது. இதில் கமல்ஹாசன் கூட்டணியில் இன்னமும் கூட வாய்ப்புள்ளது. அங்கிருந்து அழைப்பும் வந்துள்ளது. ஆனால், தனது தேமுதிகவுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி ஜூனியர் என்று, தேமுதிகவினர் நேற்று வரை கிண்டல் செய்து வந்தனர். எனவே, அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு.
தேமுதிகவுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், கடைசி நேரத்தில் அங்கு போய் ஒட்டிக் கொண்டால் 40 சீட் கூட கிடைக்காது. எனவே, தனித்துப் போட்டியிடுவது ஒன்றுதான் தேமுதிக முன்புள்ள பிரகாசமான ஒரே வாய்ப்பு. அதற்கு தயாராகும் வகையில் 140 பட்டியலை அக்கட்சி தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எந்த முடிவை எடுத்தாலும், உடனடியாக செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் தேமுதிகவுக்கு உள்ளது. காரணம், வேட்புமனு தாக்கல், நாளை மறுநாள் தொடங்கி, வரும் 19ம் தேதி நிறைவடைகிறது. தேமுதிகவின் பாதை எங்கே செல்கிறது? அக்கட்சியின் தொண்டர்களை போலவே, கட்சித் தலைமையும் புரியாமல் தவிக்கிறது என்பதே உண்மை.





