நாட்டு வெடிகுண்டு வீசி மோதல்..! பொதுமக்கள் பதற்றம்..!
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் தேமுதிக பிரமுகர் ராஜசேகர் என்பவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
பெரும்பாக்கத்தில் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருள் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு குடிபோதையில் இருந்த அருள் அவரது நண்பர் களுடன் சேர்ந்து ராஜசேகர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார். அப்போது தப்பியோடிய ராஜசேகர் உறவினர் ஒருவரது வீட்டில் பதுங்கி உள்ளார்.
அந்த வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கிய அருள் மற்றும் அவரது நண்பர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று ராஜசேகரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜசேகர் மீது தாக்குதல் நடத்தியது தெரிந்து அவரது ஆதரவாளர்கள் அருள் தரப்பினர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்த சத்தம் கேட்டு பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு ஓடினர் .
பெரும்பாக்கத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய ஆதரவாளர்கள் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.






