“சென்னையில் எஸ்.ஐ.,க்கு கொரோனா பாதிப்பு!!” உடன் பணியாற்றிய 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்!!
சென்னையில் எஸ்.ஐ., ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், போலீஸ் ஸ்டேஷனில் அவருடன் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் உட்பட 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
கொரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு, இந்த வைரஸ் தடுப்பு பணியில் களத்தில் நேரடியாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமின்றி, காவல் துறையினரும் பெருமளவு பாதிக்கப்பட்கின்றனர்.அரியானா மாநிலத்தில் காவல்துறை துணை ஆணையர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில், சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்தக் காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 30 போலீசார் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் எஸ்பிளனேடு காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி வேகமாக நடைபெற்றது. மேலும் கொரோனா பாதித்த எஸ்.ஐ வசித்த வீடு மற்றும் சுற்றியுள்ள வீடுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன் அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







