தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5795 பேருக்கு தொற்று… உயரிழந்தோர் 116 பேர்..! கோவை, சேலத்தில் பாதிப்பு விறுவிறு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 116 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்றும் 1,186 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் கோவை, சேலம் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு வேகமெடுத்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 5795 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,449ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 6,384ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,96,171ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் உயிரிழப்பு 116 ஆக பதிவான நிலையில் இதுவரையிலான பலி எண்ணிக்கை 6,123 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னையில் 5-வது நாளாக இன்றும் ஆயிரத்தை தாண்டி 1186 ஆக தொற்று பாதிப்பு உறுதியாகி, மொத்த எண்ணிக்கை 1,20,267 ஆக உயர்ந்து உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது வரை, தமிழகம் முழுவதும் 37,78,249பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இன்று மட்டும், 65,592 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று அதிகபட்சமாக 394 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 393 , செங்கல்பட்டில் 315, சேலம் 290, கடலூர் 238, தேனி 288 என மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கோவை, சேலம் மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்தே வருகிறது. சென்னையில் கொரோனாவுக்கு இன்று 16 பேர் உயிரிழந்த நிலையில், அதே அளவுக்கு கோவையிலும் இன்று 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.







