--- --:--:-- --

கொரோனா முன்னெச்சரிக்கை : இந்தியாவில் 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு!!

1

கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் 7 யூனியன் பிரதேசங்கள் உள்பட 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலும் பல்வேறு கட்டுடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாடே ஸ்தம்பித்து ஒரு விதமான அசாதாரண சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

 

உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ் இந்தியாவிலும் பரவுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 492 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு பலி எண்ணிக்கையும் 9 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்து மக்களை தனிமைப்படுத்துதல் மட்டுமே தீர்வு என உலக நாடுகள் முடிவுக்கு வந்து விட்டன. இதன்படி இந்தியாவில், பிரதமர் மோடி விடுத்த அழைப்பையடுத்து நேற்றுமுன்தினம் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஒட்டு மொத்த இந்தியாவே அன்றைய தினம் வீடுகளுக்குள் முடங்கியது.

 

ஆனால், கொரோனா பரவலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருவதால், இந்த வைரஸ் அரக்கனை வென்றொழிக்க ஒரு நாள் மட்டும் தனிமைப்படுத்துதல் என்பது மட்டும் போதாது என்ற முடிவுக்கு
மத்திய, மாநில அரசுகள் வந்து விட்டன. இதனால் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்து விட்டன. எனவே நேற்று காலை முதல் ஒவ்வொரு மாநிலங்களும் அடுத்தடுத்து ஊரடங்கு உத்தரவு,144 தடை உத்தரவுகளை பிறப்பிக்க ஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில் இன்று மாலை முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 144 தடை அமலுக்கு வருகிறது.
தலைநகர் டெல்லி, பஞ்சாப், ஜார்கண்ட், நாகலாந்து, கேரளா, புதுச்சேரி என 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் உள்பட பல மாநிலங்கள் ஏற்கனவே தடை விதித்துள்ளன.

 

பீகார், அரியானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பல மாவட்டங்களுக்கு இது போன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்கிம், மேகாலயா என சின்னஞ் சிறு வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் தடை விதிக்கப்படவில்லை எனினும் மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

 

இப்படி நேற்று ஒரே நாளில் இந்தியாவில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், , ரயில்,பேருந்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு நாடே ஒரு வித அசாதாரண சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று நள்ளிரவு முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்தும் அடியோடு நிறுத்தப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon