“கொரோனாவின் கோரப் பிடியில் மதுரை..!!” 10 நாளில் பாதிப்பும், உயிரிழப்பும் 4 மடங்கானது!!
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மதுரை மாறி வருவதால் மாவட்டம் முழுவதுமே அச்சத்தில் உறைந்துள்ளனர் மக்கள். மதுரை மாநகர் மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான கிராமப் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு பரவலாகி, கடந்த 10 நாட்களில் மட்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் , உயிரிழப்பும் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் முதல் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் 23-ந் தேதி பதிவாகி இன்றோடு 100-வது நாளாகியுள்ளது. மார்ச் 30-ந் தேதி முதல் கொரோனா உயிரிழப்பு பதிவானது. மார்ச் 30-ல் பாதிப்பு 4 ஆகவும் ஒரு உயிரிழப்பு எனவும் இருந்த கொரோனா நிலவரம் ஏப்ரல், மே மாதங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏப்ரல் 30-ல் 84 ஆக உயர்ந்த பாதிப்பு, மே 31-ல் 260 ஆகவே பதிவாகியிருந்தது. இந்த இரு மாதங்களில் மேலும் ஒரு உயிரிழப்பு மட்டுமே என மொத்த உயிரிழப்பு 2 ஆக இருந்தது.
கடந்த ஜுன் மாதத்திலும் முதல் 20 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை சற்று கூடுதலாக பதிவாகி ஜூன் 20-ல் மொத்த பாதிப்பு 636 ஆகவும் உயிரிழப்பு 8 ஆகவும் உயர்ந்திருந்தது. ஆனால் ஜுன் 20-ந் தேதிக்கு பிறகு கொரோனா ஆட்டம் மாவட்டம் முழுவதும் பேயாட்டமாகி விட்டது என்றே கூறலாம்.20-ந்தேதிக்குப் பிறகு மின்னல் வேகத்தில் பாதிப்பு எண்ணிக்கை எகிறத் தொடங்கியது.
அதிலும் கடந்த 6 நாட்களில் 202,194, 217, 284,303,257 என தினமும் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் அதிக எண்ணிக்கையிலான தொற்று பாதிப்பு உறுதியாகி அபாய கட்டத்துக்கு உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 10 நாட்களில் மட்டும் 1810 பேருக்கு பாதிப்பு உறுதியாகி, மொத்த எண்ணிக்கை 2567 ஆக உயர்ந்து 4 மடங்காக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் ஜுன் 20-ல் 8 ஆக இருந்த நிலையில், ஜூன் 30-ல் 4 மடங்காகி 32 ஆக உயர்ந்துள்ளது.
இதில், மொத்த தொற்று பாதிப்பில் மதுரை மாநகரில் 80% பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், மதுரை புறநகரில் பரவலாக பல்வேறு சிறு நகரங்கள், கிராமங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.இந்நிலையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறினால், சென்னையைப் போல் மதுரையும் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறிவிடும் அபாயத்தில் உள்ளது.






