திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று பிரசாரத்தில் பேசிய கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளை இதற்கான கடைசி நாள் என்ற நிலையில், பெரும்பாலானவர்கள் மனுதாக்கல் செய்து, பிரசாரங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தேர்தலில், 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன.
கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டவுடன் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும். இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார்.
அதிகாரிகளை மிரட்டும் தொனியில் அமைந்திருந்த இந்த வீடியோ பதிவு இணையதளங்களில் வைரலானது. இதை பார்த்து பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். மணல் கொள்ளை பற்றி இப்படி அப்பட்டமாக பிரச்சாரத்திலேயே செந்தில்பாலாஜி பேசியதற்கு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். திமுகவினருக்கும் இது பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் மணல் அள்ளுவது தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் புகார் அளித்துள்ளார். அரசு அதிகாரிகளை மிரட்டும் நோக்கில் பரப்புரையில் பேசிய செந்தில் பாலாஜி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.





