கோவை : துடியலூர் அருகே விடிய,விடிய ” திக்..திக்…..” காட்டு யானைகள் நடமாட்டத்தால் விடிய, விடிய தூங்காமல் வீட்டிற்குள் இருந்த எல்க்ட்ரீசியன் குடும்பம் !!!
கோவை துடியலூரை அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கதிர்நாயக்கன் பாளையம் லட்சுமி நகர் பகுதிக்கு நேற்று இரவு மலைப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளன.யானைகள் அப்பகுதியில் வசித்து வந்த எலக்ட்ரீசியன் கனகராஜ் என்பவரின் வீட்டின் கேட்டை உடைத்தும், அங்கிருந்த சேர் உள்ளிட்ட பொருட்களை வெளியே எடுத்து வீசியும்,வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளது.
அந்த நேரத்தில் வீட்டின் உள்ளே கனகராஜ் அவரது அம்மா, மனைவி, இரு குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு உள்ளேயே இருந்துள்ளனர். மேலும்,அந்த யானைகள் அருகிலுள்ள தோட்டத்தில் புகுந்து சோளப்பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தொப்பம்பட்டி ஆனந்தன் கார்டன், கணபதி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் மேலும்,2 யானைகள் வலம் வந்தன.இதன் காரணமாக வனத்துறையினரால் உடனடியாக யானைகளை விரட்ட முடியவில்லை.மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் விடிய விடிய போராடி யானைகளை மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, மாலை 7 மணியளவில் இந்த பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துவருவதால் பன்னிமடையில் இருந்து கதிர்நாயக்கன் பாளையத்திற்கு வரும் வழியில் பொதுமக்கள் அந்த பகுதியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும்,காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு காவலர்களை அதிகளவில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
விடிய,விடிய தூக்கமில்லாமல் குழந்தைகளுடன் ” திக்…திக்…..” என ஒவ்வொரு வினாடியையும் கடத்திய என எலக்ட்ரீசியன் குடும்பம் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.






