கோவை : தடாகம் பகுதியில் செம்மண் கொள்ளை.தட்டிகேட்ட சமூக ஆர்வலரை தாக்கிய செங்கல் சூளை அதிபர்கள்.தாக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிந்த காவல் துறை !!!
கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள நம்பர் 24 வீரபாண்டி, சின்னத்தடாகம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சோமையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன.இப்பகுதியில் சுமார் 200 க்கும் மேற்பட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த ஊராட்சிகள் மலைதள பாதுகாப்பு மற்றும் திட்டக்குழுமம் ( ஹாகா ) அனுமதி பெற்ற ஊராட்சிகளாகும்.
இப்பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகள் மாசுகட்டுப்பாட்டு வாரியம்,வனத்துறை, வருவாய்த்துறை, கனிம வளத்துறை,மலைதள பாதுகாப்பு மற்றும் திட்டக்குழுமம், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கண்டித்து கோவை தடாகம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கணேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதி மன்றம் கனிம வள கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்டங்களை அமுல்படுத்த உத்திரவிட்டது.
இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் செம்மண் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு டிப்பர் லாரிகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்தனர்.நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் கடந்த மூன்று மாதங்களாக மண் எடுக்காமல் இருந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 350 முதல் 400 டிப்பர் லாரிகளில் மண் எடுத்து வருகின்றனர்.

உயர் நீதிமன்ற ஆணையின்படி கனிம வள கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஜனவரி 5 ஆம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சமூக ஆர்வலர் கணேஷ் தலைமையில் மலைவாழ் மக்கள் சங்கத்தினர்,விவசாய மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் சின்னத்தடாகம் கிராமத்தில் மகேஸ்வரி என்ப்வருக்கு சொந்தமான நிலத்தில் செம்மண் திருடிய TKT டிசம்பர் லாரி எண் TN38 DJ 8200 என்ற எண்ணுள்ள லாரியை தடுத்து நிறுத்தி வடக்கு வட்டாட்சியர்,வருவாய் ஆய்வாளர்,ஆட்சியர், ஆகியோருக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு வந்த 100 க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், பணியாளர்கள் செம்மண் கொள்ளைக்கு எதிராக வழக்கு தொடுத்த கணேஷ் என்பவரை தாக்கியதோடு அவரோடு வந்த மாணிக்கராஜ்,மற்றும் சமூக ஆர்வலர்களையும், நில உரிமையாளர் மகேஷ்வரியையும் தாக்கியுள்ளனர். சமூக ஆர்வலர்கள் தாக்கப்படும்போது வந்த தடாகம் உதவி ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரையும் தடுக்காமல் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும்,தடாகம் காவல் நிலையத்திற்கு சென்ற மாணிக்கராஜ், பரமேஸ்வரன் ஆகிய இருவரை அங்கு கூடியிருந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் தடாகம் துணை காவல் நிலையம் முன்பு வைத்தே கடுமையாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து காவல் துறையினர் தடுத்து அவர்களை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செங்கல் சூளை உரிமையாளர்கள் தங்களிடம் பணிபுரியும் வட இந்திய தொழிலாளர்களை கூட்டி வந்து,லாரி ஓட்டுநரை ஆறுமுகம்,கிளீனர் வசந்தராஜை தாக்கியதாகவும்,அவர்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறி கோவை – கேரளா செல்லும் சாலையில் உள்ள தடாகம் பகுதியில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூக ஆர்வலரை தாக்கிய செங்கல் சூளை உரிமையாளர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் தாக்கப்பட்ட கணேஷ்,ராஜேந்திரன்,பரமசிவன்,கருணன்,மாணிக்கராஜ்,மகேஸ்வரி,சின்னராஜ் உள்ளிட்டோர் மீதே தடாகம் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கணேஷ் கூறுகையில் ” கோவையிலுள்ள அரசு அதிகாரிகள் கனிம வள கொள்ளையில் ஈடுபட்ட வாகனங்களை பிடித்தும்,வழக்கு பதிவு செய்யாமல் விட்டதன் விளைவு தான் தாங்கள் தாக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.மேலும்,கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டால் மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ” எனவும், கேள்வி எழுப்பினார்.
ரூ.1000 கோடிக்கு மேல் செம்மண் கொள்ளையில் ஈடுபட்டவர்களை நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீதி கிடைக்கும். இல்லையென்றால் காவல், வருவாய், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் இணைந்து பசுமை கொஞ்சும் தடாகம் பள்ளத்தாக்கை பாலை வனமாக்கும் என்பதில் ஐயமில்லை.
தாக்கிய செங்கல் சூளை அதிபர்களையும்,தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாத காவல் துறை தாக்கப்பட்டவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இப்பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் முன்னாள்,இந்நாள் ஊராட்சித்தலைவர்கள்,மாவட்ட கவுன்சிலர் கவி சரவணக்குமார்,திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உட்பட அதிமுக,திமுக முக்கிய பிரமுகர்களுக்கும் இப்பகுதியில் செங்கல் சூளைகள் சொந்தமாக செயல்பட்டு வருவதும்,அதிமுக,திமுக இவ்விஷயத்தில் மட்டுமே இணைந்து செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.







