--- --:--:-- --

விவசாயிகளோடு மத்திய அரசு இன்று ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை..!

3

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராடும் விவசாயிகளோடு மத்திய அரசு இன்று ஆறாம்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறது. மின்சார சட்டம் 2020 திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்சங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டரீதியாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு 5 கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. ஆறாம் கட்டமாக கடந்த 9ஆம் தேதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 

இந்த பேச்சுவார்த்தையை ஒட்டி அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை மேற்கொண்டனர். திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

 

ஆனால் விவசாய சங்கங்களின் சார்பில் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகள் குறித்தும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விவசாயிகளின் நலன் கருதி மின்சாரச் சட்டம் 2020ஐ வரை திரும்ப பெறுவது குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon