தனது குழந்தையை காண்பதற்கு முன்பே உயிரைவிட்ட துணை விமானி..!
இன்னும் இரண்டு வாரங்களில் பிறக்கவிருக்கும் தனது குழந்தையை காண ஆவலாக இருந்த துணை விமானி அகிலேஷ் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த அகிலேஷ் குமார் என்ற அந்த துணை விமானி 2017 ஆம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.
அதே ஆண்டு டிசம்பர் மாதம் மேகா என்பவரை மணம் முடித்துள்ளார். தற்போது மேகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். பொது முடக்கத்துக்கு முன் வீட்டுக்கு வந்த அகிலேஷ் குமார் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வருவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த மே 8-ஆம் தேதி முதன் முறையாக துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு இந்தியர்களை அழைத்து வந்த அகிலேஷ் குமாரை கேரள மக்கள் வரவேற்றனர். தற்போது அதே கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்தில் சிக்கி அகிலேஷ் குமார் உயிரிழந்திருப்பது நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.







