10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு..!
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்வு குறித்த முக்கியத் தரவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) வெளியிட்டுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த 2025-26 கல்வி ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத, தனியார் மாணவர்கள் மற்றும் சிறைக்கைதிகள் உட்பட மொத்தம் 9.09 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். இதில் முறையான பள்ளி மாணவர்கள் (Regular students) மட்டும் சுமார் 8.82 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இருப்பினும், யாரும் எதிர்பாராத விதமாக 55,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்தேர்வர்களைப் பொறுத்தவரை (Private candidates), மொத்தம் பதிவு செய்திருந்த 25,801 பேரில், சுமார் 6,000-க்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கவில்லை. இதுதவிர, இந்த ஆண்டு ஒரு சிறப்பம்சமாக 395 சிறைக்கைதிகளும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுகள் இயக்ககம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
தேர்வுப் பணியில் 47,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். காப்பி அடித்தல் மற்றும் இதர முறைகேடுகளைக் கண்காணிக்க 4,950-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் (Flying Squad) மாநிலம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டன. இந்தக் கடுமையான கண்காணிப்பையும் மீறி, மாநிலம் முழுவதும் மொத்தம் 13 மாணவர்கள் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





