அரசியல்வாதி விஜய் உடன் மோதுங்கள், நடிகர் விஜய் உடன் அல்ல – கிரிஸ் ஜோடங்கர் கண்டனம்
ஜன நாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி தொடரும் நிலையில் கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என விஜய்க்கு ஆதரவாக தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் கடைசி படம் என்ற அறிவிப்புடன் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவாகியுள்ள படம் ஜனநாயகன். கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் ஆரம்பிக்கப்பட்ட போது இப்படம் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்றே முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்குப் பின்பு திடீரென தேதி மாற்றப்பட்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் ஜனவரி 9ஆம் தேதியை எதிர்நோக்கி ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் காத்திருந்தனர். ஆனால் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக படத்தின் ரிலீஸ் தேதியே ஒத்திவைப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நிறுவனம், தங்களது கையை மீறி நிகழ்ந்த சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ள அந்நிறுவனம், அதுவரை பொறுமை காத்து அன்பும் ஆதரவும் அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனநாயகன் திரைபடம் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் வெளியீடு தள்ளிப்போனதற்கு பலரும் தங்களது கருத்துகளை சோசியில் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் விஜய்க்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், பிரதமர் மோடி அவர்களே நடிகர் விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் ஒரு கலைஞரின் படைப்பை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயங்களுக்காக சினிமாக்களை தணிக்கை செய்வதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
கலை மற்றும் பொழுதுபோக்கு துறைகள் அரசியல் போராட்டங்களில் கருவிகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உங்கள் அழுத்தத்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதால் விஜயின் திரைப்படம் தாமதங்களை சந்தித்து வருகிறது; இது தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நியாயமல்ல. அரசியலைக் கலைத்துறையிலிருந்து விலக்கி வைத்து, படைப்பாற்றல் சுதந்திரத்தை மதிப்போம்.
நீங்கள் எதிர்கொள்ள வேண்டியது அரசியல்வாதி விஜயை, நடிகர் விஜயை அல்ல. மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் வேலை செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.






