கொரொனாத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்..!
தமிழகத்திற்கு தேவையான கொரொனாத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் தமிழகத்தில் தடுப்பூசி பயன்பாடு உயர்ந்திருக்கும் நிலையில் மத்திய அரசிடமிருந்து போதிய அளவில் தடுப்பூசிகள் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக மக்கள் தொகை மற்றும் கொரொனா பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப ஒரு கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில் மொத்தம் 42 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி தட்டுப்பாடு சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கவும் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மக்கள் தொகை மற்றும் கொரொனா பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப தமிழகத்திற்கு தடுப்பூசிகள் ஒதுக்கப்படவில்லை என்று கூறியிருக்கும் முதலமைச்சர் ஜூன் மாதத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.






