--- --:--:-- --

இன்று மும்பை செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..!

1

மும்பையில் இன்று நடைபெறும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார். நாட்டின் 18 ஆவது மக்களைவைக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.

 

அறிவிப்பு வெளியான அடுத்த நாளான இன்று, இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது. நாட்டின் தென் முனையான கன்னியாகுமரியில் இருந்து வடக்கு எல்லையான காஷ்மீர் வரை, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணம், அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

 

இதையடுத்து, இரண்டாம் கட்டமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிய இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை கடந்த ஜனவரி 14-ஆம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். நாகலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம், பிகார், ராஜஸ்தான், குஜராத் என 15 மாநிலங்கள் வழியாக, சுமார் 6,700 கிலோ மீட்டர் தொலைவுக்கு, 63 நாட்கள் பயணம் செய்த ராகுல் காந்தி, மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள சட்டமேதை அம்பேத்கரின் நினைவிடமான சைத்யபூமியில் யாத்திரையை இன்று நிறைவு செய்கிறார்.

 

இதற்காக, பிரமாண்ட விழாவுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியா கூட்டணி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, மும்பை சிவாஜி பார்க்கில் நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திலும் ராகுல்காந்தி பங்கேற்று பேசுகிறார். இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.

 

இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.இதற்காக, டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தியின் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதுடன், இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசவுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் என்பதால் இது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

முன்னதாக, இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவு இடமான மும்பை வந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரையை வாசித்து தனது பயணத்தின் இறுதிக்கட்டத்தை எட்டினார்.

 

அப்போது பேசிய ராகுல் காந்தி, காங்கிaரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உறுதியளித்தார். தனது நீண்ட பயணத்தில் ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை அறிந்து கொண்டதாகவும், அநீதிக்கான அரசு வேருடன் பிடுங்கி எறியப்படும் எனவும் ராகுல்காந்தி சூளுரைத்தார்.

Right Menu Icon