பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி அனுப்பியுள்ள கடிதம்..!
தொல்லியல் துறை நடத்த உள்ள இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பில் சேருவதற்கான தகுதிகளில் ஒன்றாக தமிழ் முதுகலை படிப் பையும் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தொல்லியல் துறை நடத்த உள்ள இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பில் சேர சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு, பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒன்றில் முதுநிலைப் பட்டம் அவசியம் என விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பு செம்மொழியாக முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தமிழ் தகுதிப் பட்டியலில் முழுமையாக புறக்கணிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை 48 ஆயிரம் கல்வெட்டுகள் குறித்த விவரங்கள் பதிப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் 28,000 கல்வெட்டுகள் தமிழில் மட்டுமே உள்ளதாகவும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பில் சேர தமிழ் மொழியையும் ஒரு பகுதியாக அறிவிக்க ஆவன செய்யுமாறு பிரதமரை முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.





