திமுக நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
ஆண்டிபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆண்டிபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார். அப்போது, திமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
உழைப்பவர்களுக்கு அதற்கேற்ற அதிகாரம் கட்சியில் நிச்சயம் கிடைக்கும் என உறுதி அளித்த முதலமைச்சர், கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் உழைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்களையும் முதலமைச்சர் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இன்று மற்றும் நாளை மாவட்டச் செயலாளர்களை சந்தித்து வருகிறார். தேர்தல் எதிர்நோக்கி வரும் நிலையில், இருபெரும் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் களத்தை இன்னும் சூடாக்கியுள்ளது.





