கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…! ஊரடங்கு தளர்வா..?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பாதிப்பால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வருகிற மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு குழுக்களை ஏற்படுத்த முடிவு செய்து, அதன்படி 40 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுக்களை அரசு அமைத்துள்ளது.
இந்த குழுக்களுடன் முதல் அமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி காணொலி காட்சி மூலம் கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையில், மே 3க்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் உள்ளிட்டோரும், அரசு உயரதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கொரோனா நெருக்கடி காலத்தில் சிறப்பாக பணியாற்றும் கலெக்டர்களுக்கு முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். பின்னர் அவர் பேசும்பொழுது, கலெக்டர்களின் சிறப்பான பணியால் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றன.
அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவை முழுமையாக தடுக்கலாம். கிராமங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.






