இன்று புதுவை வரும் தலைமை தேர்தல் ஆணையர்..!
இன்று புதுச்சேரியிலும், நாளை தமிழ்நாட்டிலும், சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனையை தலைமை தேர்தல் ஆணையர் நடத்தவுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று சென்னை வருகிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைக்கான பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தேர்தல் அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையமும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு இன்று சென்னை வருகிறது.
மதியம் 2 மணிக்கு சென்னை வரும் குழுவினர், தனி விமானம் மூலம் புதுச்சேரி செல்கின்றனர். அங்கு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்துவிட்டு, மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கின்றனர். தொடர்ந்து நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு 11 மணிக்கு சென்னை வருகின்றனர்.
முதல் கட்டமாக தலைமைச் செயலர், டிஜிபி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை, வருமான வரி, சுங்கத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.





