சென்னையில் சிஏஏக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டம்..! தடையை மீறியதாக 20,000 பேர் மீது வழக்கு!
சென்னையில், உயர் நீதிமன்ற தடையை மீறி நேற்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவித்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனாலும் திட்டமிட்டபடி தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று காலை சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி கோட்டை நோக்கி புறப்பட்டது.
ஆனால் உயர்நீதிமன்ற தடையை மீறி பேரணியாக சென்றவர்களை தடுத்து நிறுத்தவும், கைது செய்யவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் சிறிது தூரம் பேரணியாக சென்றவர்கள் சேப்பாக்கம் அருகிலேயே பேரணியை நிறைவு செய்வதாக அறிவித்தனர்.
உயர் நீதிமன்ற தடை உத்தரவை மதித்து தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தைக் கைவிடுவதாக கூறி, சேப்பாக்கம் அருகிலேயே, சிஏஏ-க்கு எதிராக சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் நேற்றைய போராட்டம் எந்தவித சலசலப்போ, தள்ளுமுள்ளு சம்பவமோ நடைபெறாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற தடையை மீறியதாக இவர்கள் மீது சென்னை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





